புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பணியாற்றிய சுபம் ஷோகீன், கடந்த 2022 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் அவரது சக ஊழியர் ஆர்த்தி மண்டல் என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி, முறையான ஒப்புதலின்றி ஏராளமானவர்களுக்கு விசா வழங்கி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிபிஐ முறையாக வழக்கு பதிவு செய்வதற்கு முன்பே, ஷோகீன் இந்தியாவில் இருந்து தப்பி சென்று விட்டார். தற்போது சுபம் ஷோகீனின் சொத்துக்களை அடையாளம் கண்டு கண்காணிக்க இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இன்டர்போல் சில்வர் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்களை அடையாளம் காண்பதற்காக நடப்பாண்டு ஜனவரி மாதம் சில்வர் நோட்டீஸ் என்ற புதிய திட்டத்தை சோதனை அடிப்படையில் இன்டர்போல் அறிமுகப்படுத்தியது. அதன்படி முதலில் இத்தாலியின் கோரிக்கையை ஏற்று முதல் சில்வர் நோட்டீஸ் ஜனவரி மாதம் 10ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது சில்வர் நோட்டீஸ் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஈடி கோரிக்கையை ஏற்று ரூ.113 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட அமித் மதன்லால் லகன்பாலுக்கு எதிராகவும் இன்டர்போல் சில்வர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.