சென்னை: தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் மற்றும் கலந்தாய்வு கூட்டம் சென்னை அம்பத்தூர் எச்.பி.எம். பேரடைஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது: தேசிய கட்சிகளில் காங்கிரசில் மட்டும்தான் கொள்கையும், கோட்பாடும் மக்களுக்காக இருக்கிறது. கடந்த 4 மாதங்களாக பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் படித்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள். கட்சி கட்டமைப்பு வலிமைப்படுத்துவது, பலப்படுத்துவது, வாக்கு வங்கியை அதிகப்படுத்துவது என தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
காங்கிரஸ் கட்சியில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். தலைவரை யாராலும் உருவாக்க முடியாது. அவரவர் பகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகளை தீர்த்துவைத்தால் கட்சி தானாக வளரும். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நாம் ஆட்சியில் இல்லை. கட்சியை வலிமைப்படுத்துவதற்கு, உரியவரிடம் உரிய பொறுப்பை வழங்க வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழக காங்கிரசில் விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக அடுத்தவாரம் புதுடெல்லியில் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
அந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் டி.என்.முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் இல.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் டி.டி.அய்யம்பெருமாள், மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், மற்றும் வளசை ஜெ.பாலமுருகன், எச்.பீர்முகம்மது, கவுன்சிலர் கே.வி.திலகர், எம்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன், முன்னாள் எம்.பி., ஜெ.எம்.ஆரூண், மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், கலைப் பிரிவு தலைவர் சந்திரசேகரன், கவுன்சிலர் பானுப்பிரியா, தென்சென்னை மேற்கு மாவட்ட பகுதி தலைவர்கள் பி.டி.ரோமியோ, இரா.மோகனரங்கன், டி.லோகபிரான், இ.மோகன் குமார், ஏ.என்.பச்சையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.