புதுடெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய வழக்கப்படி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. விழாவில், சமீபத்தில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்னைகள், பழங்குடியினர், விவசாயிகள், ஆஷா பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட சுமார் 6,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.
தேசியக் கொடி ஏற்றி வைக்க செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடியை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத் வரவேற்பார்கள். அங்கு, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் பிரதமர் மோடி, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைப்பார். அதைத் தொடர்ந்து காலை 7.30 மணி அளவில் நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையாற்றுவார். ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜ பெரும்பான்மை பலத்தை எட்டத் தவறி உள்ளது.
இதனால், பாஜ அரசு மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி புதிய திட்டங்களையோ அல்லது சில நலத்திட்டங்களின் வரம்பை அதிகரித்தோ அறிவிப்புகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ல் பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து 11வது முறையாக செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்ற உள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகரின் அனைத்து எல்லைகளும் நள்ளிரவில் இருந்தே சீல் வைக்கப்பட்டுள்ளன. எந்த கனரக வாகனங்களும் டெல்லியில் நுழைய அனுமதியில்லை.
1,037 பேருக்கு பதக்கம்
* நக்சலைட் பாதிப்புள்ள சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் பின்தங்கிய 13 கிராமங்களில் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட உள்ளது.
* சுதந்திர தினத்தையொட்டி, மிகச்சிறப்பாக பணியாற்றிய ஒன்றிய மற்றும் மாநில போலீஸ் படையைச் சேர்ந்த 1,037 அதிகாரிகளுக்கு வீர தீர சேவை, மிகச்சிறந்த பணி, மெச்சத்தக்க சேவை என்ற 3 பிரிவுகளில் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இதில் 214 பேருக்கு வீர தீர சேவைக்கான விருது வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக சிஆர்பிஎப் வீரர்கள் 52 பேரும், ஜம்மு காஷ்மீர் போலீசில் 31 பேரும் இவ்விருதினை பெறுகின்றனர்.
* மிகச்சிறந்த பணி செய்ததற்கான பிரிவில் 94 பேருக்கும், மெச்சத்தக்க சேவை செய்தோருக்கான பிரிவில் 729 பேருக்கும் ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* 18 சிபிஐ அதிகாரிகள், ஜம்மு காஷ்மீரில் 2022ல் நடத்த தீவிரவாத தாக்குதலுக்கு ஆளான 10 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மணிப்பூர் வன்முறையில் வீரமரணம் அடைந்த 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோருக்கு வீர தீர செயல்களுக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது.