டெல்லி: டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி இணையதள அலுவலகத்துக்கு டெல்லி போலீஸ் சீல் வைத்தது. டெல்லி – என்சிஆர் பகுதியில் ‘நியூஸ்கிளிக்’ என்ற இணைய ஊடக செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த செய்தி நிறுவனமானது சீனாவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் பணப்பரிமாற்ற விவகாரங்களை அமலாக்கத்துறை கண்காணித்து வந்தது. அதில் சீன நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் மேற்கண்ட நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.
அதையடுத்து டெல்லி-என்சிஆர் பகுதியில் வசிக்கும் இணைய செய்தி நிறுவன அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்களின் வீடுகளில் இன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தி வருகிறது. சோதனை நடத்திய போலீஸ் சிலரை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை கைது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி இணையதள அலுவலகத்துக்கு டெல்லி போலீஸ் சீல் வைத்தது. சீனாவிலிருந்து ரூ.38 கோடி பெற்றதாக நியூஸ் கிளிக் நிறுவன ஊடகவியலாளர்கள் மீது புகார் எழுந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூஸ் கிளிக் நிறுவனத்தில் பணியாற்றும் சிலரின் லேப்டாப், மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.