புதுடெல்லி : புதிய மனுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக உள்ளார். அவர் கைது செய்யப்படலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையானது, மது விற்பனை உரிமையாளர்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு சாதகமான அம்சங்களை சேர்த்து வரையறை செய்ததாகவும், இதற்காக பிரதிபலனாக பெரும் தொகையை ஆம் ஆத்மி பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய புகார் மற்றும் மனு அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ, இதில் பலகோடி ரூபாய் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரியைின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை தனியாக பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரியில் அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவரை தொடர்ந்து, கடந்த மாதம் இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு வெளியான ஒரு மணி நேரத்தில், இதே வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரலில் சிபிஐ அனுப்பிய சம்மனை ஏற்று. அதன் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜரானார். இந்நிலையில், அமலாக்கத் துறையின் சம்மனை ஏற்று, இன்றைய தினம் அதன் அலுவலகத்தில் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும். ஆனால், கெஜ்ரிவால் நேற்றிரவு வரையில் விசாரணைக்கு ஆஜராவது பற்றி உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. விசாரணைக்கு ஆஜராக அவர் அவகாசம் கேட்கவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை, அவகாசம் கேட்காமல் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானதை போலவே, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இன்று அவர் ஆஜராவார் என்றும் நம்பப்படுகிறது.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மியும் இடம் பெற்றுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த கூட்டணியை சிதைக்கும் வகையில் இதன் தலைவர்களை சிபிஐ, அமலாக்கத் துறை மூலமாக பாஜ குறி வைக்கலாம் என பேச்சு கடந்த சில நாட்களாகவே அடிப்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகின்றன. பாஜ.வின் இந்த கைது திட்டத்தின்படி, முதல் தலைவராக இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ள கெஜ்ரிவாலை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி அமைச்சர் அடிசி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அதோடு, இந்த கைது படலம் கெஜ்ரிவாலோடு நிற்கப் போவதில்லை. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற மாநில முதல்வர்களை கைது செய்யவும் பாஜ அரசு திட்டம் தீட்டி உள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாகவும் ஆம் அத்மி எம்பி ராகவ் சதா நேற்று தெரிவித்தார்.
இது போன்ற சூழலில் கெஜ்ரிவால் இன்று காலை 11.30 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக அழைக்கப்பட்டு உள்ளார். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்தியா கூட்டணி தலைவர்களும், ஆம் ஆத்மி தலைவர்களும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. விசாரணை முடிவில் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவரா? அல்லது விசாரணைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுவாரா? என்பது இன்று தெரியும்.