* சாலையில் மரங்கள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு
* விமான சேவை பாதிப்பு; பொதுமக்கள் கடும் அவதி
புதுடெல்லி: டெல்லியில் நேற்று புழுதி காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த மழைக்கு 2 பேர் பலியாகினர். டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவியது. 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென புழுதி புயலுடன் பலத்த காற்று வீசியது. பின்னர் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பல்வேறு இடங்களில் தற்காலிகமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புழுதி புயலை தொடர்ந்து, பலத்த காற்றும் வீசியது. அதனுடன் மழையும் சேர்ந்து கொண்டதால் பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. அவைகள் சில இடங்களில் மின் இணைப்பு வயர்கள், சாலையில் சென்ற வாகனங்கள் மீதும் விழுந்தது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், டெல்லி-நொய்டா, டெல்லி-காஜியாபாத் மற்றும் டெல்லி-குருகிராம் சாலைகள் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியில் இருந்து நகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதில் விமானத்தின் முன்பகுதியில் சேதமடைந்ததால் விமானிகள் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் விமானம் நகரில் பத்திரமாக தரையிறங்கியது. சேதமடைந்த விமானம் பத்திரமாக நகரை அடைந்ததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரிக் ஓ பிரையன், நடிமுல் ஹக், மம்தா தாக்குர், சகரிகா கோஷ் மற்றும் மனஸ் புனியா ஆகியோரும் பயணம் செய்திருந்தனர். அவர்கள் காஷ்மீரில் பயங்கர்வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் சகரிகா கோஷ் கூறுகையில், ‘அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். மக்கள் அலறி கொண்டிருந்தார்கள். பிரார்த்தனை செய்தார்கள். பீதி அடைந்தார்கள். அந்த வழியாக எங்களை அழைத்து சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு பகுதி உடைந்திருப்பதை கண்டோம்’ என்றார். மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மொத்தம் 12 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு சர்வதேச விமானம் மும்பைக்கும் திருப்பி விடப்பட்டது. மேலும் இந்த மழைக்கு வாலிபர் மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவரும் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.