வாஷிங்டன்: டெல்லியில் ஜி20 மாநாட்டிற்கு முன்பாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையேயான இருதரப்பு சந்திப்பு வரும் 8ம் தேதி நடக்க இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இந்தியா தலைமை ஏற்றுள்ள ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு டெல்லியில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் டெல்லி வர உள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 7ம் தேதி டெல்லி வர இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், ‘ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அதிபர் ஜோ பைடன் வரும் 7ம் தேதி டெல்லிக்கு செல்கிறார். அடுத்த நாள் (8ம் தேதி) அவர் பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்பார். இந்த சந்திப்பில், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை குறைப்பது, உலக வங்கி உள்ளிட்ட பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் திறனை மேம்படுத்துவது, வறுமை ஒழிப்பு மற்றும் உலக சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர். மேலும், ஜி20 அமைப்பின் இந்திய தலைமையை பாராட்டும் பைடன், 2026ல் அமெரிக்காவின் தலைமை குறித்து குறிப்பிடுவார். டெல்லி பயணத்தை தொடர்ந்து பைடன், வரும் 10ம் தேதி வியட்நாமின் ஹனோய்க்கு பயணம் மேற்கொள்வார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.