புதுடெல்லி: கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா கடந்த பிப்.26ல் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,’ சிசோடியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வாதங்கள் விசாரணை நீதிமன்றத்தில் எப்போது தொடங்கும்? நீங்கள் அவரை காலவரையின்றி சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன், குற்றச்சாட்டு மீதான வாதங்கள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்’ என்றனர்.
அதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ,’சிசோடியாவுக்கு எதிரான வழக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் வழங்குதல் கட்டத்தில் உள்ளது. அதன்பிறகு குற்றச்சாட்டின் மீதான வாதங்கள் தொடங்கும்’ என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள்,’ நாங்கள் கேட்பது குற்றச்சாட்டு மீதான வாதங்கள் ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை. அவை எப்போது தொடங்கும்? நாளைக்குள் (செவ்வாய்கிழமை) சொல்லுங்கள்’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.