
டெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். டெல்லி அரசு அமல்படுத்தி, பின்னர் கைவிடப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
இதைத் தொடர்ந்து சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையும் இவரை கைது செய்துள்ளது. தற்போது இவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போதே, இந்த மதுபான கொள்கை முறைகேட்டில் முக்கிய குற்றவாளி முதல்வர் கெஜ்ரிவால்தான் என்று பா.ஜ குற்றம் சாட்டியது.
இந்நிலையில், மதுபான முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நேற்று முன்தினம் திடீரென சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்றுள்ள கெஜ்ரிவால், அதில் குறிப்பிட்டுள்ளபடி விசாரணைக்கு ஆஜராகப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில, சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்காக மதுபானக் கொள்கையை மாற்றுவதற்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மணீஷ் சிசோடியா சிறையில் உள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார்.