புதுடெல்லி: அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால், நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் காவலில் உள்ள கெஜ்ரிவால் சிறையில் இருந்தவாறே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனிடையே அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா,”முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும் காட்ட முடியாது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் கெஜ்ரிவால் சதி செய்தது உறுதியாகி இருக்கிறது. பொது வாழ்வில் உள்ளவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கெஜ்ரிவால் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே தவிர, தேர்தலின்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது.
மற்றவர்களுடன் இணைந்து முறைகேட்டில் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதை காண முடிகிறது. நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்; அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நீதிமன்றங்கள் அரசியலுக்குள் செல்ல முடியாது; அரசியல் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் முன் செல்லாது. கெஜ்ரிவால், மத்தியஅரசு இடையேயான பிரச்னை கிடையாது; ED, கெஜ்ரிவால் இடையேயான சட்ட விவகாரம். தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது,” இவ்வாறு கூறி கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார்.