சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் பயணிப்பதாக விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த மர்ம இ-மெயிலால் பரபரப்பு ஏற்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில், ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக, கடந்த 8 நாட்களாக தொடர்ந்து, விமானங்கள் ரத்து, பல மணி நேரம் தாமதம் என்று, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 138 பயணிகள், 6 விமான ஊழியர் உள்பட 144 பேருடன் வந்து கொண்டு இருந்தது.
இதற்கிடையே சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த ஒரு மர்ம இமெயிலில், ‘டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வரும் பயணிகளில், ஓரிரு மர்ம மனிதர்கள் வெடிகுண்டுடன் வருகின்றனர். அந்த விமானம் சென்னையில் வந்து தரை இறங்கியதும், அந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த, சென்னை விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியதும், விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
சென்னை விமான நிலையத்திற்கு, வழக்கமாக வரும் வெடிகுண்டு புரளி என தெரியவந்தது. ஆனால் பயணிகள், விமானங்கள் தாமதம் காரணமாக, பல மணி நேரம் காத்துக் கிடந்து விட்டு, சென்னைக்கு திரும்பி வருகிறோம். இங்கும் எங்களை உடனடியாக வெளியில் செல்ல முடியாமல், வெடிகுண்டு சோதனை என்ற பெயரில் சோதனை நடத்தி, தாமதமாக வெளியில் அனுப்புகிறார்கள் என்று, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியப்படி, விமான நிலையத்திலிருந்து வெளியே சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்து மர்ம இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.


