டெல்லி : செயலிகள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து டெல்லியில் இயக்கப்படும் வாடகை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டி வரும் நிலையில், நவம்பர் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகரிக்கும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள் மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது செயலிகள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் வெளிமாநில பதிவு எண் கொண்ட வாடகை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காற்றில் உள்ள மாசுபாட்டை குறைக்க, இம்மாதத்தில் மேக விதைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மழையை தருவிக்க டெல்லி அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ராய் தெரிவித்தார். வளிமண்டலத்தில் மேகங்கள் அல்லது ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மேக விதைப்பு முயற்சி செய்ய முடியும். நவம்பர் 20-21 ஆம் தேதிகளில் இதுபோன்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகளுடன் அமைச்சர் ராய் ஆலோசனை நடத்தினார். அப்போது, இது தொடர்பாக ஒரு முன்மொழிவை தயாரிக்குமாறு விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் ராய் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறுகையில், செயற்கை மழை தருவிப்பது குறித்து உலகளவில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருசில முயற்சிகள் நடந்துள்ளன. செயற்கை மழைக்கு, அடிப்படைத் தேவையான மேகங்கள் அல்லது ஈரப்பதம் தேவை என்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் அது சாத்தியமாகும் என்றார்.