புதுடெல்லி: டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் அதிகளவில் காற்று மாசு ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்கண்ட மாநிலங்களின் தொழில், வர்த்தகம் போன்ற துறைகள் பெரியளவில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கும் நிலையில், காற்று மாசு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசுகள் சிரமங்களை எதிர்கொள்வதால், இதுகுறித்து விவாதிப்பதற்காக அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் மோடிக்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறை (சிடிஐ) கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து சிடிஐ-யின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், ‘தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு காரணமாக வியாபாரம் பெரியளவில் பாதித்துள்ளது. காற்று மாசு ஏற்படுவதை தடுக்க மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு இணைந்து கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களது வர்த்தகம் மேலும் பாதிக்கப்படும். டெல்லியில் காற்றின் தரம் கடுமையான நிலையை எட்டியதால், மக்கள் ஷாப்பிங் செய்வதை தவிர்த்து வருகின்றனர். பிற நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் டெல்லிக்கு வர விரும்புவதில்லை.
டெல்லியில் மட்டுமின்றி நொய்டா, ஃபரிதாபாத், குர்கான், சோனிபட் போன்ற நகரங்களிலும் காற்று மாசு அதிகமாக உள்ளது. டெல்லி அரசு முடிந்து வரை செயல்பட்டாலும், அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே டெல்லியை காற்று மாசில் இருந்து விடுவிக்க முடியும். எனவே டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச அரசுகள் பங்கேற்கும் வகையில் காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான அவசரக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும். இதுகுறித்து அவருக்கு எங்களது தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது’ என்றார்.