டெல்லி : நாட்டின் தலைநகர் டெல்லியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக காற்று மாசு குறைந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள் மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காற்றில் உள்ள மாசுபாட்டை குறைக்க, இம்மாதத்தில் மேக விதைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மழையை தருவிக்க டெல்லி அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ராய் தெரிவித்தார்.
வளிமண்டலத்தில் மேகங்கள் அல்லது ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மேக விதைப்பு முயற்சி செய்ய முடியும். நவம்பர் 20-21 ஆம் தேதிகளில் இதுபோன்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகளுடன் அமைச்சர் ராய் ஆலோசனை நடத்தினார். அப்போது, இது தொடர்பாக ஒரு முன்மொழிவை தயாரிக்குமாறு விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் ராய் தெரிவித்தார்.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்ததால் அங்கு புகை மூட்டம் அகன்று காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 408 என்ற அளவில் இருந்தது. நேற்று மாலை இதுவே 437 ஆக இருந்தது. குறிப்பிடத்தக்கது.காற்றின் தரக் குறியீடு 0 – 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 – 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம். இதனிடையே தீபாவளிக்கு முன்னர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு கணிசமாக முன்னேறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.