புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 2-வது நபர் கைது செய்யபட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு விவகாரம் தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில், இன்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை மேற்கொண்ட போது, எம்பி சஞ்சய் சிங் அவரது இல்லத்தில் இருந்தார். இன்று காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. அப்போது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான ஆவணங்கள் சஞ்சய் சிங்கின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில்:
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, இந்தாண்டின் தொடக்கத்தில் சஞ்சய் சிங்குடன் ெதாடர்புடைய சிலரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. முன்னதாக ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா மீதும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் எழுந்ததால், அவரை கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
அதன் தொடர்ச்சியாக அவர் பிப்ரவரி 28ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறாக பல்வேறு தரப்பிலும் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தற்போது சஞ்சய் சிங்கின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.
இதனை தொடர்ந்து டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.