டெல்லி : பணக்குவியல் விவகாரத்தில் சிக்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க தீவிரமாகி உள்ள ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் impeachment தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பணக்குவியல் விவகாரத்தில் சிக்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவுப்படி, விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் கடந்த மாதம் அனுப்பி வைத்தார்.
இந்த விசாரணை அறிக்கையில், நீதிபதி வீட்டில் பணக்குவியல் இருந்தது உறுதியானதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் மூலமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மழைக்கால கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.