புதுடெல்லி: கடந்த ஆண்டு மே 28ம் தேதி இந்தூரில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஒரு பெண் பயணித்தார். அப்போது, அதே விமானத்தில் பயணித்த ஒருவர் பெண் பயணியை முறைத்து பார்த்துள்ளார். இதனால் அந்த பெண் பயணிக்கு மிகுந்த அசவுகர்யம் ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் அந்த பெண் பயணி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 509 ன் கீழ் இந்திராகாந்தி சர்வ தேச விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வழக்கில் குறிப்பிட்ட நபருக்கு எதிராக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்தர் துடேஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில் இரு தரப்பினரும் ஒரு சமரசத்திற்கு வந்துள்ளனர்.எந்த ஒரு வற்புறுத்தல், பயமும் இல்லாமல் இதில் சமரசத்தை ஏற்று கொண்டதாக அவர் கூறினார். இந்த விவகாரத்தில் தீர்வு கண்ட பிறகு வழக்கை தொடர்வதில் எந்த பயனும் இல்லை. எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.