டெல்லி: முதலமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்தால் அதை முன்மாதிரியாக கொண்டு மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோர்களின் பதவிகளையும் பாஜக பறிக்க தயங்காது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால்; தனது கைதுக்கு பிறகு நேர்மையான, எளிமையான மனிதனை பொய் வழக்கு ஒன்றில் பாஜக அரசு சிறையில் அடைந்துள்ளதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றும் தனது கைதுக்கு பிறகு ஆம் ஆத்மீ கட்சி மேலும் வலிமை பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்துவிட்டால் உடனடியாக தனது அரசு கவிழ்க்கப்படும் என கூறியுள்ள கெஜ்ரிவால். அது ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறும் என குறிப்பிட்டுள்ளார். இன்று நெருக்கடி காரணமாக தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டால் நாளை மேற்கு வங்கத்தில் மம்தாவின் அரசையும், கேரளாவில் பினராயி விஜயனின் அரசையும் பாஜக கவிழ்க்க தயங்காது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.