டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்ளை வழக்கில் நடந்த முறைகேட்டை அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 26-ம் தேதியன்று திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கைது செய்தது.
தன்னை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சிபிஐயின் கருத்துக்களை பெறாமல் கெஜ்ரிவாலுக்கு உடனடியாக இடைக்காலப் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.