டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் குறியீடு மிக மோசமான நிலையில் பதிவாகியுள்ளது. கடுமையான பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை ஏறிய விட்டபடி வாகனங்கள் சென்றன. தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 432 ஆக பதிவாகியுள்ளது. இது கடுமையான வகையின் கீழ் வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும் காலையில் அடர்ந்த மூடுபனி நிலவியது.
இதற்கிடையே, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்ததால், ஒரு சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன. புகையின் அடர்த்தி காரணமாக டெல்லி நகரம் முழுவதும் தெரிவுநிலையை குறைந்து, போக்குவரத்தைப் பாதிக்கப்பட்டது. அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட் விமான நிலையங்களில் காலை 5:30 மணிக்கும், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் விமான நிலையம் காலை 7:00 மணிக்கும் அதிகபட்ச பாதிப்பு இருந்தது.