டெல்லி: டெல்லியில் காற்று மாசை குறைக்க ஒரு வாரம் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன முறை அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் முடியவில்லை. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லி மாநில வாகன போக்குவரத்து மற்றும் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் தீவிரமடையும் காற்று மாசுபாட்டால் குழந்தைகளும் முதியவர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
வாகன பயன்பாட்டை குறைக்க 50% பணியாளர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 13 முதல் 20-ம் தேதி வரை ஒரு வாரம் அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதிகளை மீறுவோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு எதிரொலியாக 10, 12-ம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.