சென்னை: ஏர்போர்ட், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரே நேரத்தில் அதிகளவு பயணிகள் வருவதால் அவர்கள் கொண்டு வரும் பெரிய லக்கேஜ்களை ஸ்கேன் செய்வதில் காலதாமதம் ஆகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. அதில், விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில்நிலையங்கள் மிக முக்கியமானவை. வெளியூர்களில் இருந்து அதிகளவு பயணிகள் வருவதாலும் செல்வதாலும் அதிகளவு கூட்டம் அங்கு இருக்கும்.
இதனால் இந்த ரயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஏர்போர்ட் மெட்ரோவில்- 2, சென்ட்ரலில் -4, எழும்பூரில்-2 ஸ்கேனர்கள் உள்ளன. இங்கு வரும் பயணிகள் பெரிய அளவிலான லக்கேஜ்களை கொண்டு வருகின்றனர். அதனை ஸ்கேன் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் ஒரே நேரத்தில் அதிகளவு பயணிகள் வருவதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் ஸ்கேனர்கள் அமைக்க வேண்டும் என்றும் அவை பெரிய லக்கேஜ்களை எளிதில் ஸ்கேன் செய்யும் விதத்தில் இருக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், எம்ஜிஆர் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வெளியூர் செல்லவும் வரவும் அதிகளவு பணிகள் வருகிறார்கள். இந்த நிலையங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல மெட்ரோ ரயில் பெரும் உதவியாக இருக்கிறது. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அதிகளவு மக்கள் வருகிறார்கள். இதே நிலைதான் ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்திலும் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் பெரிய லக்கேஜ்களுடன் அதிகளவு மக்கள் வருகிறார்கள். இதனால் ஸ்கேன் செய்யும் இடத்தில் நீண்ட தூரத்திற்கு பயணிகள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மற்ற பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் ஸ்கேனர்கள் வைக்க வேண்டும்,’என்றார்.