திருவொற்றியூர்: தாயை தரக்குறைவாக பேசியதால் உருட்டு கட்டையால் தந்தையை அடித்துக் கொன்ற மகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வீரய்யா (65). இவர் மணலி புதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 3 மகள்களும், ரோஜேஷ் (38) என்ற ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் 3 பேரும் திருமணமாகி தனித்தனியே அதே பகுதியில் வசித்து வருகின்றனர். மகன் ரோஜேஷ் அதே பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகம்மாள், அவரது மகன் ரோஜேஷ் ஆகிய இருவரும் உணவு அருந்திவிட்டு வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீரய்யா போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதற்கு, ‘‘தினமும் குடித்துவிட்டு வருகிறீர்களே இது நியாயமா, குடும்பத்தை ஒழுங்காக பார்ப்பதில்லை, மகனுக்கு வயசாகிறது, இன்னும் திருமணம் செய்து வைக்க முடியவில்லை, நீயெல்லாம் ஒரு குடும்பத் தலைவனா’’ என வீரய்யாவை நாகம்மாள் திட்டியுள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த ரோஜேஷ், இருவரையும் சமாதானம் செய்துள்ளார். அப்போது வீரய்யா, நாகம்மாளை தரக்குறைவாக திட்டியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ரோஜேஷ், என் தாயை பற்றியா தவறாக பேசுகிறாயே என்று கூறி, வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து வீரய்யாவை பின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். இதைப் பார்த்த நாகம்மாள் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
அதில் வந்தவர்கள் வீரய்யாவை பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்தது தெரிந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த ரோஜேஷ் சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், வீரய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, எண்ணூர் காவல் சரக உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைத்து ரோஜேஷை தேடினர். பின்னர் திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ரோஜேஷை நள்ளிரவில் கைது செய்தனர். அவரை நேற்று திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குடும்ப தகராறில் தந்தையை மகனே அடித்துக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.