கான்பூர்: பார்படாசில் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்றது. இதில் இந்திய சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பங்களிப்பும் இருந்தது. நாடு திரும்பி மும்பை கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர் தனது சொந்த ஊரான உ.பி. மாநிலம் கான்பூருக்கு சென்றார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலக கோப்பை வெற்றி குறித்து அவர் கூறியதாவது:- கேப்டன் ரோஹித்துக்கு என்னை பிடிக்கும். அவர் மீது எனக்கும் மிகுந்த அன்பு உண்டு. நான் காயமடைந்த போது தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சியில் இருந்போது ரோகித், `நீங்கள் எப்படி செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் திரும்பி வந்ததும், உங்கள் பந்துவீச்சில் நான் சொல்லும் மாற்றங்களைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று என்னிடம் தெரிவித்தார்.
இந்த உலகக் கோப்பை அற்புதமாக திட்டமிட்டு அணியை திறம்பட வழி நடத்திய ரோகித் சர்மாவுக்கானது. வீரர்களுடன் பேசும்போது, அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார். அதை தனது பேட்டிங்கில் செயல்படுத்தி அணியை முன்னின்று வழி நடத்தினார். இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. இந்த வெற்றிக்கு பின் திறந்தவெளி பஸ்சில் சென்று ரசிகர்களுடன் கொண்டாடியதை மறக்கவே மாட்டேன். இது போன்ற அனுபவத்தை நான் பெற்றதில்லை. மும்பையில் நடந்த கொண்டாட்டம் நம்ப முடியாத நினைவாகும்’’ என்றார். மேலும் தனது திருமணம் குறித்து குல்தீப் கூறுகையில், ”விரைவில் திருமணம் குறித்த நல்ல செய்தியை கூறுவேன். ஆனால், நிச்சயமாக அது ஒரு நடிகை அல்ல. நான் திருமணம் செய்து கொள்ள இருப்பவர் என்னையும், எனது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் நபராக இருப்பது முக்கியம்” என்றார்.