புதுடெல்லி: பாதுகாப்பு ரகசியத்தை வெளிப்படுத்திய வழக்கில் கனடா தொழில் அதிபரை சிபிஐ நேற்று கைது செய்தது. இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிவித்ததாக கூறி கடந்த மே மாதம் 16ம் தேதி பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி மற்றும் முன்னாள் கடற்படை தளபதி ஆஷிஷ் பதக் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பதக் மற்றும் ரகுவன்ஷி கைது செய்யப்பட்டதில் இருந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சந்தேக நபர்களை சிபிஐ தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பாதுகாப்பு உளவு வழக்கு தொடர்பாக கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரை சிபிஐ கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2019ம் ஆண்டு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த தொழில் அதிபர் ராகுல் கங்கல் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். கங்கலின் வருகை பற்றிய தகவலைப் பெற்ற சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து அவரை கைது செய்தனர். அதை தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 4 நாள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.