புதுடெல்லி: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தா உள்பட பல இடங்களில் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த கொலையை அடுத்து இந்திய மருத்துவர் சங்கத்தின் கேரள மாநில கிளை 22 மாநிலங்களில் உள்ள 3885 டாக்டர்களிடம் ஆன்லைனில் சர்வே நடத்தியது.
இதில் 85 % 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 61 % பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுகலை பயிற்சி மருத்துவர்களிடம் ஆய்வு நடத்திய குழுவினர் கூறியிருப்பதாவது: இரவு நேரங்களில் டாக்டர்களின் பணி பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. டாக்டர்களிடம் நடத்தப்பட்ட மிக பெரிய ஆய்வு இதுவாகும். இதில் மூன்றில் ஒரு பங்கினர் அதில் பெரும்பாலான பெண்கள் இரவு நேர பணி பாதுகாப்பற்றதாக உள்ளது என்று தெரிவித்தனர். வேறு சிலர் இரவு நேரங்களில் தற்காப்புக்கு ஆயுதம் எடுத்து செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். 35 % பேர் இரவு நேர பணி பாதுகாப்பற்றது என தெரிவித்துள்ளனர்.இதில் பெரும்பாலானவர்கள் பெண் டாக்டர்கள்.20 முதல்30 வயதுடைய மருத்துவர்கள் மிகக் குறைந்த பாதுகாப்பு உணர்வைக் கொண்டிருந்தனர். இந்த குழுவில் பெரும்பாலும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுகலை பயிற்சி மருத்துவர்கள் உள்ளனர்.
45 % பேர் இரவு நேரங்களில் தங்களுக்கு ஓய்வு அறை ஒதுக்கப்படவில்லை என்றும் ஓய்வு அறை ஒதுக்கப்பட்டவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 20 முதல்30 வயதுடைய மருத்துவர்கள் மிகக் குறைந்த பாதுகாப்பு உணர்வைக் கொண்டிருந்தனர். அறையில் கூட்ட நெரிசல், தனியுரிமை இல்லாமை மற்றும் பூட்டுகள் காணாமல் போனது, மாற்று ஒய்வு இடங்களை கண்டறிய மருத்துவர்களை நிர்ப்பந்திப்பது போன்றவை நடப்பதாக தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிசிடிவி கேமராக்களை நிறுவுவதல், மருத்துவமனையில் மின்விளக்குகளை அமைப்பது, வெளியில் இருந்து வரும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, அபாய அறிவிப்பை வெளியிடும் கருவியை நிறுவ கேட்டுக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.