புனே: மஹா ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் நிலை வீரர் எலியாசை வென்று சென்னை வீரர் ராம்குமார் ராமநாதன் அதிர்ச்சி தந்தார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் மஹாஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் போட்டியிடும் வீரர்களின் தரவரிசையில் முதல் நிலை வீரராக ஸ்வீடன் வீரர் எலியாஸ் எமர் பட்டியலிடப்பட்டுள்ளார். இவருடன் சென்னையை சேர்ந்த பட்டியலிடப்படாத வீரர் ராம்குமார் ராமநாதன் மோதினார்.
முதல் செட்டை எலியாஸ் எளிதில் கைப்பற்றினார். ஆனால், அடுத்த இரு செட்களிலும் தீயாய் ஆடிய ராம்குமார் யாரும் எதிர்பாராத வகையில் அவற்றை கைப்பற்றினார். இதனால், 5-7, 6-1, 6-4 என்ற செட்கணக்கில் அவர் வெற்றி பெற்றார். இந்த போட்டி ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் நடந்தது. இதையடுத்து, இறுதி தகுதிச் சுற்றுக்கு ராம்குமார் முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்ய வீரர் இலியா சிமாகின் உடன் இந்திய வீரர் முகுந்த் சசிகுமார் மோதினார். அந்த போட்டியில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்ய வீரர் வெற்றி வாகை சூடினார்.