கொல்கத்தா: புத்தகத்தில் வந்த சில பத்தியை வெளியிட்டு மம்தா பானர்ஜி குறித்து அவதூறு பதிவு வெளியிட்ட பாஜக மூத்த தலைவர் மீது கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திரிணாமுல் கட்சியின் முன்னாள் அமைச்சரான தீபக் கோஷ் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகளை பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கவுஸ்தவ் பாக்சி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ‘தி காடஸ் தட் ஃபெயில்டு’ என்ற அந்த புத்தகத்தின் 7வது அத்தியாயத்தின் இரண்டு பக்கங்களை பதிவிட்டு, ‘இதற்கு பதில் மம்தா பானர்ஜிக்கு மட்டுமே தெரியும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீதான அவதூறு பரப்புவதாக கூறி கவுஸ்தவ் பாக்சி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், முன்னாள் எம்எல்ஏ எழுதிய புத்தகத்தில் மம்தா பானர்ஜியைப் பற்றி மிகவும் இழிவான மற்றும் அவமரியாதையான கருத்துகள் உள்ளது. இந்த புத்தகத்தின் பக்கங்களை பதிவிடுவது முதலமைச்சரை அவதூறு செய்வது மட்டுமல்ல, பெண்ணின் கண்ணியத்தையும் அவமதிப்பதாக உள்ளது. பெண் முதலமைச்சரை இழிவுபடுத்துவதற்கு இந்த நபர் எல்லை மீறிவிட்டார். இறந்து போன எழுத்தாளரின் புத்தகத்தை குறிப்பிட்டு, அவரது வார்த்தைகளை மீண்டும் பாஜக தலைவர் பாக்சி உறுதிப்படுத்தியுள்ளார். இது ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாக்சி இவ்வாறு செய்வதன் மூலம் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், முதலமைச்சர் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேற்கண்ட விவகாரம் குறித்து கொல்கத்தா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், கவுஸ்தவ் பாக்சிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.