சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழ்நாடு அரசு நடத்தி வரும் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து பட்டம் பெற்றவன். சமீபத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அர்ச்சகர்கள் குறித்து வந்த செய்திகள் என்னை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள வினோத், கணேசன் ஆகியோர் சேர்ந்து கோமதி விநாயகம் குருக்கள் வீட்டில் மது அருந்திவிட்டு ஆபாசமாக ஆடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. கோயிலுக்கு வரும் சில பெண்களிடம் திருநீரை மொத்தமாக அவர்களது முகத்தில் அள்ளி போட்டு அத்துமீறி நடந்து கொள்வது போன்ற வீடியோவும் வைரலாகி வருகிறது.
இதையடுத்து பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் குருக்கள் கோமதிநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அர்ச்சகர்களின் செயல் கடும் கண்டனம் மற்றும் நடவடிக்கைக்குரியது. ஆனால், இந்த பிரச்னையை மடைமாற்றும் விதமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகை, இந்து முன்னணி, பாஜ, சங்பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட அர்ச்சகர்கள் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அப்பட்டமான பொய்யை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். எனவே இதுபோன்ற அவதூறு கருத்துகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.