மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நடிகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த ஐகோர்ட் கிளை, அந்த பணத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்காக செலுத்த உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே முக்கூடலை சேர்ந்தவர் நடிகர் ராஜேந்திரநாத் (எ) மீசை ராஜேந்திரன். தற்போது சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே முக்கூடலில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள முத்துமாலையம்மன் கோயில் நிர்வாகத்தில் பலவித முறைகேடுகள் நடக்கின்றன.
நிர்வாகத்தில் தலையிடும் தனிநபர்கள் குறித்து புகார் கூறினால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. தனிநபர்களது தலையீடு இன்றி பொருட்காட்சி மற்றும் கடைகள் ஏலத்தை நடத்த கடந்தாண்டு ஐகோர்ட் கிளையில் மனு செய்தேன். இதுபற்றி ஐகோர்ட் அளித்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், ‘‘கோயில் செயல் அலுவலருக்கு எதிராக இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக தனிநபர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது குறித்த குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
கோயில் விவகாரங்கள் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து மனு தாக்கல் செய்து வருகிறார். அறநிலையத்துறை அதிகாரிகளை தவறான நோக்கத்துடன் மிரட்டி துன்புறுத்தும் நோக்கத்தில் இந்த அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் அதிகாரிகளை ஓட வைத்து தனது வலிமையை வெளிப்படுத்துவதே இந்த மனுவின் நோக்கம். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் ரூ.25 ஆயிரம் அபராதத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான ஐகோர்ட் கிளையின் தனி வங்கி கணக்கில் செலுத்தி விபரத்தை செப். 11ல் தெரியபடுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.