மாதவரம்: ஓட்டேரி பகுதியில், தாயை பற்றி அவதூறாக பேசியதால் வாலிபரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி பி.எஸ்.மூர்த்தி நகர் பி- பிளாக் பகுதியை சேர்ந்தவர் சிராஜ் (30). இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. இவர், நேற்று மதியம், தனது நண்பர்களான ஓட்டேரி தாசமகான் 5வது குறுக்கு தெருவை சேர்ந்த இம்ரான் (30), ஓட்டேரி தர்கா தெரு, 4வது சந்து பகுதியை சேர்ந்த கலீல் (28) ஆகியோருடன் சேர்ந்து, ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலம் அருகே உள்ள இடிந்து போன கட்டிடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இம்ரான் மற்றும் கலீல் ஆகிய இருவரும் சேர்ந்து, சிராஜை சரராரியாக தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரது கழுத்தை அறுத்துள்ளனர். ஆனாலும், ஆத்திரம் அடங்காமல் அவரது பிறப்புறுப்பை அறுத்தனர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து ஆட்டோவில் சென்று, ஓட்டேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த சிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ், சரணடைந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். அதில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஓட்டேரி மகாலட்சுமி தியேட்டரில் ராயன் திரைப்படம் பார்க்கும்போது உயிரிழந்த சிராஜ் முன் வரிசையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். அவருக்கு பின் வரிசையில் அமர்ந்து படம் பார்த்த இம்ரான் முகமது கலீல் ஆகியோரின் கால் சிராஜ் மீது பட்டுள்ளது.
இதனால், அவர்களை ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார். இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை அடிப்பதற்காக நேற்று இம்ரான், கலீல் இருவரும் சேர்ந்து சிராஜை வரவழைத்து மது அருந்தி உள்ளனர். அப்போது, போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிராஜ், நண்பன் கலீலின் தாய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆததிரமடைந்த கலீல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிராஜின் கழுத்தை அறுத்துள்ளார். அதற்கு இம்ரானும் உதவி செய்துள்ளார். பின்னர், அவரது பிறப்புறுப்பையும் அறுத்து வீசியுள்ளனர். இதையடுத்து கலீல் மற்றும் இம்ரான் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
* மாறுபட்ட தகவல்
போலீசில் சரணடைந்த இருவரும் போலீசாரை குழப்புவதற்காக 6 பேர் சேர்ந்து குடித்தோம். இந்த கொலையை செய்தோம், எனக் கூறியுள்ளனர். போலீசார் அப்பகுதியில் இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு 3 பேர் மட்டுமே சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வந்தனர்.