திருவாடானை: திருவாடானை பகுதியில் அதிகளவில் மான்கள் பெருகி வருகின்றன. எனவே இந்த பகுதியில் மான்களின் சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை கண்மாய் மற்றும் காட்டுப்பகுதிகளில் அதிகளவில் புள்ளிமான்கள் கடந்த 10 வருடங்களாக பல்கி பெருகி வருகிறது. குறிப்பாக திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்கலகுடி, எஸ்பி.பட்டினம் உட்பட ஏராளமான கிராம பகுதிகளில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், கண்மாய் பகுதிகளிலும் அதிகளவில் மான்கள் நடமாட்டம் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த புள்ளிமான்கள் பெரும்பாலும் கூட்டமாகவே காணப்படுகின்றன. அடர்ந்த காட்டுப் பகுதியில் இவை சுதந்திரமாக உலவித் திரிந்து, இரை தேடி உண்கின்றன. சமீபத்தில், திருவாடானை கண்மாயின் கரையோரப் பகுதியில் ஒரு பெரிய புள்ளிமான்கள் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்த காட்சி, அப்பகுதி மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. இயற்கையின் அழகை ரசித்த அவர்கள், இந்த அரிய விலங்குகளின் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இக்கண்மாய்ப் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வாழ்ந்து வருவதால், அவற்றின் பாதுகாப்பிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் சரணாலயம் அமைப்பது அவசியம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சரணாலயம் அமைக்கப்பட்டால், புள்ளிமான்களை வேட்டையாடும் நபர்களிடம் இருந்தும், வாழ்விட அழிவிலிருந்தும் பாதுகாக்கப்படும். மேலும் இப்பகுதியின் சுற்றுச்சூழல் மேம்பாடு அடைவதோடு, சுற்றுலாத் தலமாகவும் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருவாடானை பகுதியில் அதிக அளவில் பெரிய கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய் பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காட்டுப்பகுதிகளாக உள்ளது. அங்கு அதிகமான மான்கள் பெருகி திரிகின்றன. கோடை காலம் பிறந்தவுடன் கண்மாய் தண்ணீர் வற்றி விடுவதால், குடிக்க தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் மான்கள் வந்து விடுகிறது. அப்போது நாய்களின் பிடியில் சிக்கி ஏராளமான மான்கள் பலியாகின்றன. எனவே இந்த பகுதியில் அறிய வகை மான்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக அரசு மான்களின் சரணாலயம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.