புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாடினார். ஒரு குயவர் வீட்டிற்கு சென்ற அவர் அந்த வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி, பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவுடன் தீபாவளியை கொண்டாடினார். இதுதொடர்பாக 9 நிமிட வீடியோவை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில்,’ சிறப்பான நபர்களுடன் மறக்கமுடியாத தீபாவளியை கொண்டாடினேன். இந்த தீபாவளியை நான் குயவர் குடும்பத்துடன் கொண்டாடினேன். நான் அவர்களின் வேலையை நெருக்கமாகப் பார்த்தேன்.
அவர்களின் திறமைகளைக் கற்றுக் கொள்ள முயற்சித்தேன். அவர்களின் சிரமங்கள் மற்றும் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டேன். நாம் மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம். ஆனால் அவர்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க, தங்கள் கிராமம், நகரம், குடும்பம் ஆகியவற்றை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் களிமண்ணில் இருந்து மகிழ்ச்சியை உண்டாக்குகிறார்கள். அவர்களால் ஒளியில் வாழ முடியுமா? வீடு கட்டுபவர்கள் தங்கள் சொந்த வீட்டை கட்டுவது கடினம்.
தீபாவளி என்பது வறுமை மற்றும் ஆதரவற்ற இருளை அகற்றும் ஒளி. அத்தகைய ஒரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதில் மக்களின் திறமை இந்த தீபாவளி உங்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பு, முன்னேற்றம் மற்றும் அன்பைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் தற்போது வசித்து வரும் 10, ஜன்பத் இல்லத்தில் சுவரில் வண்ணம் தீட்டும் தொழிலாளர்களுடன் இணைந்து ராகுல்காந்தி வேலை செய்த வீடியோவும் வெளியாகி உள்ளது.
* 10, ஜன்பத் வீட்டின் ரசிகர் நான் இல்லை
டெல்லி லுட்யன்ஸ் நகரில் உள்ள 10, ஜன்பத் பங்களா 1990ம் ஆண்டு ராஜீவ்காந்திக்கு ஒதுக்கப்பட்டது. அவர் மறைவிற்கு பிறகு அந்த பங்களாவில் சோனியா வசித்து வருகிறார். ராகுல் எம்பி ஆனதால் அவருக்கு 12, துக்ளக் லேன் இல்லம் ஒதுக்கப்பட்டது. அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டதால் தற்போது மீண்டும் 10, ஜன்பத் இல்லத்திற்கு வந்து, சோனியாவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மீது அதிக பற்று உண்டா என்ற மருமகன் ரைஹான் வத்ரா கேள்விக்கு,’ என் தந்தை (ராஜீவ்காந்தி) இந்த வீட்டில் வசித்த போதுதான் இறந்துவிட்டார். அதனால் நான் இந்த வீட்டின் பெரிய ரசிகன் இல்லை’ என்று தெரிவித்தார்.