Tuesday, July 15, 2025
Home மகளிர்கலைகள் ஆழ்கடலில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த தென்னக வீராங்கனைகள்!

ஆழ்கடலில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த தென்னக வீராங்கனைகள்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

கடந்த எட்டு மாதங்களாக, இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் ரூபா அழகிரிசாமி, லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கோனாத் இருவரும் ஆர்ப்பரிக்கும் கடலில் ‘ஐஎன்எஸ்வி தாரிணி’ (INSV TARINI) என்ற சிறிய படகில் இரவு, பகல் பயணம் செய்து வரலாறு படைத்துள்ளனர். லெப்டினன்ட் கமாண்டர் ரூபா புதுச்சேரியைச் சேர்ந்தவர். 2017ல் இந்திய கடற்படையில் சேர்ந்தார். அவரது தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கேரளா, கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இந்திய கடற்படையுடன் தன்னை தில்னா இணைத்துக் கொண்டது ஜூன் 2014ல். இவரின் தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

எட்டு மாதம் இவர்கள் இருவரும் கடலில் பயணித்தது உல்லாசமான பிரமாண்டமான சரக்கு கப்பலில் கிடையாது. 56 அடி நீளம் கொண்ட சிறிய படகில்தான். அகன்று விரிந்திருக்கும் கடலை ஒப்பிடும் போது இந்தப் படகை கடலில் மிதக்கும் ஒரு துரும்பிற்குக்கூட ஒப்பிட்டு பார்க்க முடியாது. கடலில் படகை செலுத்த தேவையான கருவிகள், செயற்கைக்கோள் தொடர்பு சாதனங்கள், அவசரகால திசை மாற்றும் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தாலும், கடலில் சீற்றம் ஏற்பட்டால், இவை எதுவும் கைக்கொடுக்காது. மேலும் காற்று வீசும் திசைக்கு ஏற்ப அவ்வப்போது பாய்மரத்தின் திசையை திருப்பி படகினை செயல்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் சமாளித்துதான் இவர்கள் இருவரும் படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

‘‘குழந்தை பருவத்திலிருந்தே, தில்னாவிற்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் கனவு. அதற்கான தேர்வினை எழுதி தேர்ச்சிப் பெற்றவர் கடற்படையில் சேர்ந்தார். பயணத்தின் போது தில்னாவை எங்களால் அடிக்கடி தொடர்புகொள்ள முடியவில்லை. அவ்வப்போது செயற்கைக்கோள் தொலைபேசி மூலம்தான் அவளின் நலனை விசாரித்தோம்’’ என்றார் தில்னாவின் தங்கையான தீப்தி. ‘‘நடுக்கடலில் வானிலை எப்படி என்றே சொல்ல முடியாது. சட்டென்று மாறிவிடும். மேலும் கடல்களில் உருவாகும் பேரலைகளை சமாளிக்க வேண்டும். காற்றை மட்டுமே நம்பி பயணிக்கும் பாய்மரப் படகில் நான்கு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் வழியாக சுமார் 50,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தோம்.

மணிக்கு 93 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று மற்றும் புயல் வீசும் வானிலையையும், கடுங் குளிர், புயல் என அனைத்தையும் எதிர்கொண்டு, இயற்கைக்கு சவாலான நிலையிலும் முன் வைத்த காலை பின்வாங்காமல் பயணத்தை முடித்தோம். இதே படகில் சில ஆண்டுகள் முன் இந்தியக் கடற் படை வீராங்கனைகள் ஆறு பேர்கள் 254 நாட்களில் 40,000 கிலோ மீட்டர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு கோவாவிலிருந்து நாங்க இருவர் மட்டுமே பயணித்தோம். கோவாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் ஃப்ரீமண்டில் துறைமுகம் அங்கிருந்து நியூசிலாந்தின் லிட்டெல்டன் துறைமுகத்தில் இறங்கியவர்கள், ஃபோர்ட் ஸ்டான்லி, ஃபால்க்லேண்ட் தீவுகள்… இறுதியாக தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்குச் சென்று, மீண்டும் கோவாவின் பனாஜிக்குத் திரும்புவதுதான் எங்களின் பயணத் திட்டம்.

பயணத் திட்டத்தில் முதல் துறைமுகமான மேற்கு ஆஸ்திரேலியாவின் ஃப்ரீமண்டில் துறைமுகத்தை நாங்க கடந்த ஆண்டு நவம்பர் அடைந்தோம். அங்குள்ள தமிழ் சங்கம் எங்களை மேள தாளத்துடன் வரவேற்றது. அந்த நிகழ்வினை மறக்கவே முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பயணத்திற்காக நாங்க எங்களை தயார் படுத்தி வந்தோம். அதற்காக கோவாவிலிருந்து கேப்டவுன் வழியாக ரியோ டி ஜெனிரோவிற்கும், மீண்டும் கோவாவிலிருந்து விஜயபுரம், அதன் பின் மீண்டும் கோவாவில் இருந்து மொரீஷிய போர்ட் லூயிஸ் வரையிலும் பயணம் செய்து கடலின் அனுபவத்தை பெற்றோம். இந்தப் பயணத்தில், பூமத்திய ரேகையை இரண்டு முறை கடந்தோம்.

எங்களின் இந்தப் பயணம் இன்றைய தலைமுறை பெண்கள் கடல் பயணங்களில் செல்ல ஊக்குவிப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். நீண்ட காலமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் களமாகத்தான் கடல் பயணம் இருந்து வந்தது. அதில் பெண்களும் வர வேண்டும். இந்த எட்டு மாதத்தில் ஏழு ஜென்மங்களையும் வாழ்ந்து விட்டதாக நாங்க உணர்கிறோம். சிரமங்கள், அபாயங்கள், ஆபத்துகள் அனைத்தும் கடந்திருக்கிறோம். அப்படி இருந்தும் இது எங்களின் கடைசிப் பயணமாக இருக்கப்போவதில்லை’’ என்றவர்கள் பயணத்தில் சந்தித்த சோதனைகளை விவரித்தார்கள்.

‘‘கடல் பயணத்தில் எங்களுக்கு மிகவும் சோதனையாக அமைந்தது தெற்கு பசிபிக் சமுத்திரம் மற்றும் பூ மத்தியரேகைக்கு அருகில் அமைந்திருக்கும் தெற்கு பெருங்கடல்தான். இவை உலகின் மிகவும் ஆபத்தான கடல்கள். இதில் பயணம் செய்யும் போது உயரமான அலைகள், புயல் காற்று அத்தனையையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. பசிபிக் பெருங்கடலில் பயணித்த போது நள்ளிரவில் படகு பயணிக்க உதவும் கருவிகள் செயல் இழந்துவிட்டன.

உதவி கேட்டு யாரையும் தொடர்பு கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை. அந்தக் கருவிகளை மீண்டும் செயல்பட வைக்க மூன்று மணி நேரம் போராடினோம். அதற்கு நாங்க இந்தியரான கமாண்டர் அபிலாஷ் டோமிக்குதான் நன்றி சொல்லணும். அவர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக உதவினார்’’ என்று தங்களின் பயண அனுபவங்களை பகிர்ந்தார்கள் லெப்டினன்ட் கமாண்டர்களான ரூபா, தில்னா.

கண்ணம்மா பாரதி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi