குளச்சல்: குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 60 நாள் மீன் பிடி தடைக்காலம் கடந்த ஜூலை 31 ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளன.
ஆழ்கடல் பகுதியில் தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணை ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர். கடந்த 1ம் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற குளச்சல் விசைப்படகுகளில் 3 படகுகள் இன்று காலை கரை திரும்பின.
இந்த விசைப்படகுகளில் கிளி மீன்கள் ஓரளவு கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். அதன்படி 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ₹.2 ஆயிரம் விலை போனது. இது முந்தைய காலம் ₹.4500 முதல் ₹.5 000 வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாள் தடையை முன்னிட்டு மீன் ஆலைகள் இயங்கவில்லை. தடை நீங்கி உள்ளதை அடுத்து இந்த ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கிய பின் தான் இந்த வகை மீன்களுக்கு போதிய விலை கிடைக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.