தீனதயாள் உபாத்யாயா தொலைத் தொடர்பு சிறப்பு விருதுகளுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் தகுதியான பரிந்துரைகளை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி, சுகாதாரம், வணிகம், விவசாயம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் தொலைத் தொடர்பு சார்ந்த செயல்பாடுகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொலைத் தொடர்பு சிறப்பு விருது மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பில் வழங்கப்படவுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத்துறையில் சிறந்து விளங்கிய அனைத்து இந்தியக் குடிமக்களும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் இந்த விருதுக்குத் தகுதி உடையவர்கள்.
விருதுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விருது, பொன்னாடை, பாராட்டுச் சான்றிதழ், ரொக்கப்பணம் ரூ.2 லட்சம் ஆகியவை வழங்கப்படும். இதுகுறித்து பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதையடுத்து விருதுகளுக்கான பரிந்துரைகளை https://awards.gov.in/ எனும் இணையதளத்தில் செப்டம்பர் 30ம்் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். விருது பெறுவோர் விழாவுக்கு வந்து செல்ல விமானக் கட்டணத்துக்கான தொகை, இதர செலவுகளுக்கு ரூ.7,500 ஆகியவை வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.