சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கோளாந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதம். ராணுவத்தில் பணி புரிகிறார். தற்போது அந்தமானில் பணியில் உள்ளார். இவர் கடந்த 2015ல் சிவகங்கை அருகே அல்லூர் பனங்காடி சாலையில் 3 வீட்டுமனைகள் வாங்கினார். இந்த மனைகளை அவர் சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் உள்ள சார்பதிவாளர் (1) அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தார். அப்போது 3 மனைகளுக்கு பதில் 2 மனைகளை மட்டும் பதிவு செய்துள்ளார். தற்போது 3 இடத்திற்கும் பட்டா வாங்க விண்ணப்பித்தபோது தான் அது தெரிய வந்தது.
திருத்த பத்திரம் பதிவு செய்ய, சிவகங்கை சார்பதிவாளர் அலுவலகம் எதிரே இருக்கும் பத்திர எழுத்தர் கண்ணனை அணுகியுள்ளார்.அவர் சார்பதிவாளர் ஈஸ்வரனுக்கு ரூ.18 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து புகாரின்படி சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டில் ரசாயன பவுடர் தடவிய ரூ.18 ஆயிரத்தை கண்ணனிடம் அற்புதம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்ணனையும், சார்பதிவாளர் ஈஸ்வரனையும் கைது செய்தனர்.
வி.ஏ.ஓ. கைது: திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த ரத்தினகுமாரின் மனைவி தேவி. இவரது தந்தை ரவிச்சந்திரன் 2002ல் காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22ம்தேதி ரத்தினகுமார் விண்ணப்பித்தார். இதற்காக திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை சேர்ந்த விஏஓ செந்தில்குமார்(50), நேற்று ரூ.3000 லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த போலீசார், விஏஓ செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.4 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு ரெய்டு: திருவாரூர் வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில், நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இணை ஆணையர் ஈரோட்டை சேர்ந்த அருணபாரதி (48) யிடம் கட்டுக்கட்டாக இருந்த ரூ.500 நோட்டுகள் ரூ.1.43 லட்சம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், அவருக்கு கீழ் இயங்கி வரும் தாலுகா வணிகவரி அலுவலகங்கள் மற்றும் ஆண்டொன்றுக்கு ரூ.40 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் செய்து
வரும் நிறுவனங்களிலிருந்து வாரம் தோறும் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கை மாறியது தெரியவந்துள்ளது.
* உதவி ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை
தஞ்சாவூர் செவப்பநாயக்கனேரி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (26). பாத்திரக்கடைக்காரர். கடந்த 2013ல் தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசை புதுப்பித்து முத்திரை பெறவும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளராக இருந்த ஜெயலெட்சுமி, கடந்த 8.7.2013ல் ரூ.2500 லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா விசாரித்து, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.