சேலம்: தமிழகத்தில் நெல், கரும்பு, மரவள்ளிக்கு அடுத்தபடியாக மஞ்சள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மஞ்சள் சாகுபடியை பொறுத்தமட்டில் தமிழகத்திலேயே ஈரோடு, சேலம் மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை உள்பட சில மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.இந்த பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு மஞ்சள் அறுவடை தொடங்கும். நடப்பாண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெரும்பாலான இடங்களில் நல்லமுறையில் பெய்துள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் மஞ்சளை பயிரியிட்டுள்ளனர்.
மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களில் விவசாயிகள் களைஎடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டை காட்டிலும் எதிர் வரும் பொங்கல் பண்டிகையில் மஞ்சள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் கடந்த ஒரு மாதமாக மார்க்கெட்டுக்கு மஞ்சள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த மஞ்சள் வியாபாரிகள் கூறியதாவது: உலக மஞ்சள் உற்பத்தியில் 91 சதவீதம் இந்தியாவில் தான் விளைகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 80 ஆயிரம் டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1.60லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது.
நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி 40லட்சம் மூட்டைகளாகும். தமிழகத்தில் மட்டும் 7 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகிறது. சுமார் 2 லட்சம் மூட்டைகள் ஈரோடு சுற்று வட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சளை பொறுத்தமட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டியே அறுவடை செய்யப்படுகிறது. நடப்பாண்டு பருவ மழைகள் நல்ல முறையில் கைகொடுத்துள்ளதால் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் ஈரோடு, சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டி உள்பட பல இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு விற்பனைக்கு வரும் மஞ்சளை ஏலம் எடுக்க மருந்து, மாத்திரை, சோப்பு, அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மார்க்கெட்டுக்கு மஞ்சள் வரத்து 40 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் பங்களாதேஷ், இலங்கை உள்பட பல நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதியாகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரத்தில் மஞ்சள் விலை அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரத்திற்கு முன்பு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.13,500க்கு விற்றது. தற்ேபாது குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.15,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.