Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திலகபாமா, சிவக்குமார் எம்எல்ஏவை தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களை கூண்டோடு நீக்க ராமதாஸ் முடிவு: தைலாபுரத்தில் முக்கிய ஆலோசனை

திண்டிவனம்: பாமகவில் பொருளாளர் திலகபாமா, சிவக்குமார் எம்எல்ஏ ஆகியோரை தொடர்ந்து அன்புமணியின் தீவிர ஆதரவாளர்களை ஓட்டுமொத்தமாக பதவி நீக்கம் செய்ய ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்கிடையே இன்று தைலாபுரத்தில் ஆடிட்டர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் உச்சகட்ட நிகழ்வாக நேற்று முன்தினம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மூச்சு விடாமல் பொய் பேசுவார், தலைமை பண்பு இல்லாதவர், பெற்ற தாய் என்றும் பாராமல் பாட்டிலால் தாக்கியவர், பாஜ கூட்டணிக்காக மனைவியுடன் காலில் விழுந்து கெஞ்சியவர் என அன்புமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து நேற்று காலை பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ஆகியோர் ராமதாசை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் பின் பாமக பொருளாளர் திலகபாமாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கி அவருக்கு பதில் சையத் மன்சூர் உசேன் என்பவரை பொருளாளராக நியமித்து ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டார். இது தவிர அன்புமணியின் ஆதரவு மாவட்ட செயலாளர்களை ஒவ்வொருவராக நீக்கி புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து ராமதாஸ் கடிதம் வழங்கி வருகிறார். அதன்படி நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மயிலம் எம்எல்ஏ சிவகுமாரை நீக்கி அவருக்கு பதில் புகழேந்தி என்பவரையும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் அனந்த கிருஷ்ணனை நீக்கி, அவருக்கு பதில் கோவிந்தராசு என்பவரையும் நியமனம் செய்துள்ளார்.

மேலும் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் என்பவரை நீக்கி அவருக்கு பதில் காடுவெட்டிரவி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவரை நீக்கி, அப்பொறுப்பில் சக்திவேல் என்பவரையும் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். அதேபோல் திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர் பாண்டுரங்கனை நீக்கி அவருக்கு பதில் ஸ்ரீராமன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் பச்சையப்பனை நீக்கி, அவருக்கு பதில் காஞ்சிபுரம் அடுத்த பெருங்குடி பகுதியை சேர்ந்த ஜோசுவா என்பவரையும் நியமித்துள்ளார். ராமதாசால் நீக்கப்பட்ட பொருளாளர் திலகபாமா மீண்டும் அப்பொறுப்பில் தொடர்வார் என அன்புமணி ராமதாஸ் நேற்று அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து கட்சி முன்னணி நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

கட்சியிலிருந்து தான் நீக்கியவர்களை அன்புமணி அதே பதவியில் தொடர்வார்கள் என அறிவிப்பது, போட்டி கூட்டம் நடத்துவது போன்றவை ராமதாசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இன்று 2வது நாளாக முன்னணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அன்புமணியின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்படும் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். வன்னியர் சங்க காலத்தில் இருந்து கட்சிக்காக தீவிரமாக உழைத்து தற்போது பதவி ஏதும் இல்லாமல் இருப்பவர்களை லிஸ்ட் எடுத்து அவர்களுக்கு பதவி வழங்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக கவுர தலைவர் ஜி.கே.மணி, பொது செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்தி முடித்து விட்டு இதற்கான காரியத்தில் அவர் இறங்குவார் என தெரிகிறது.

இதற்கிடைேயே இன்று காலை வேலூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஒரு சில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். வன்னியர் சங்க முன்னாள் துணை தலைவர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதற்கு முன்னதாக இன்று காலை தனது ஆடிட்டர் சுப்புரத்தினத்தை வரவழைத்து ராமதாஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார். அத்துடன் சட்ட வல்லுனர்களுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி நேற்று நடத்திய கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சிக்கு நிதி தேவைப்படுகிறது விருப்பம் உள்ளவர்கள் கியு ஆர் கோடு மூலம் நிதி வழங்கலாம் என கூறியிருந்தார். ஏற்கனவே கட்சி நிதி விவகாரங்களை ராமதாஸ் தான் கவனித்து வந்தார். தற்போது அன்புமணி நிதி வசூலிப்பதை தடுக்கவே ராமதாஸ் ஆடிட்டருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அன்புமணியுடன் மோதல் முற்றிய நிலையில் ஆடிட்டருடன் ராமதாஸ் நடத்திய இந்த ஆலோசனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் அன்புமணியை கண்டித்து பரபரப்பு போஸ்டர்

சேலம் மாவட்டத்தில் இருக்கும் 2 பாமக எம்எல்ஏக்கள் தனித்தனியாக பிரிந்துள்ளனர். சேலம் அருள் எம்எல்ஏ ராமதாஸ் பக்கமும், மேட்டூர் சதாசிவம் எம்எல்ஏ அன்புமணி பக்கமும் இருக்கின்றனர். மேலும் பல்வேறு கட்ட நிர்வாகிகளும் இரு அணியாக பிரிந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் பரபரப்பான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக சமூக வலைதலங்களில் தகவல்கள் பரவியுள்ளது. அதில், ‘அன்புமணியை கண்டிக்கிறோம் என தொடங்கி, கோடிக்கணக்கான வன்னியர்களின் குல தெய்வம் ஐயாவின் கண்ணீர் எங்களை கொதிக்க வைக்கிறது.

அன்புமணி செயல்பாடு கீழ்தரமாக உள்ளது. ஐயாவின் உழைப்பு, தியாகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. ஐயாவை எதிர்க்கிற அன்புமணியே பாமகவை விட்டு, வன்னியர் சங்கத்தை விட்டு வெளியேறு’ என கூறப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.