பெஷாவர்: பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கி உள்ள 3 லட்சம் ஆப்கானியர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஆப்கானியர்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதம், நிலையான அரசு இல்லாததால், பல ஆண்டுகளாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சமடைந்து வருகின்றனர். இவ்வாறு பாகிஸ்தானில் புலம்பெயர்ந்த ஆப்கானியர்களில் சுமார் 17 லட்சம் பேர் எந்த ஆவணமும் இல்லாமல் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த 24 பெரிய தீவிரவாத தாக்குதல்களில் 14 தாக்குதல்களை நிகழ்த்தியது ஆப்கான் நாட்டினர் என பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகிறது.
இதனை ஆப்கானை ஆளும் தலிபான் அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கி உள்ள ஆப்கானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் தொடங்கியது. இதன்படி, இதுவரை 3.4 லட்சம் பேர் இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாண அரசும் சட்டவிரோத ஆப்கானியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. பெஷாவரில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்ததைத் தொடர்ந்து மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் இருந்து சட்டவிரோத ஆப்கானியர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதிவுச் சான்று, ஆப்கான் குடிமக்கள் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
* பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்படுபவர்களை திரும்பப் பெற தலிபான் அரசு காபூலில் அகதிகள் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 608 பேர் ஆப்கான் திரும்பியிருப்பதாக ஆணைய செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்தார்.
* நாடு கடத்தப்படும் நபர்களால் ஆப்கானிஸ்தானில் போலியோ வைரஸ் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆப்கான் வருபவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் மருத்துவ சேவைகளை தற்போது வழங்கி வருகிறது.