சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் 2வது பெரிய பணக்காரருமான கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை முழுவதுமாக எல்ஐசி நிறுவனம் வாங்கி உள்ளது. அதானி போர்ட்ஸின் தற்போதைய கடன் சுமை ரூ.36,422 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எல்.ஐ.சி. நிறுவனம் ஒன்றிய அரசுக்கு சொந்தமானது என்பதால், ஒன்றிய அரசு ஆணைப்படி செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு உதவும்படி, ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ஆணையிட்டது யார்?. பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் அதானி போர்ட்ஸ் நிறுவனம் திவாலானால், பின்னர் எல்.ஐ.சி நிறுவனம் அளித்துள்ள ரூ.5,000 கோடி கடனை வசூலிக்க முடியாமல் தள்ளுபடி செய்ய நேரிடும் அபாயம் உருவாகியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பணத்தை பொறுப்பற்ற முறையில், அதீத கடன் சுமையில் தத்தளிக்கும், சர்ச்சைக்குரிய ஒரு நிறுவனத்திற்கு வாரி வழங்கியுள்ள மோடி அரசை கண்டிக்கிறேன்.