வேதாரண்யம்: கடன் தொல்லையால் மின் கம்பியை பிடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி பலியானார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா செண்பகராய நல்லூரை சேர்ந்தவர் குமரேசன்(35). இவரது மனைவி புவனேஸ்வரி (28). தனியார் பள்ளியில் ஆசிரியை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. வீட்டின் தரைதளத்தில் தந்தை மாசிலாமணியும், முதல் தளத்தில் மகன் குமரேசனும் வசித்துள்ளனர். கரியாபட்டினம் கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வந்த குமரேசன், கடன் சுமையால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற குமரேசன், மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பியை பிடித்தார். மின்சாரம் பாய்ந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த புவனேஸ்வரி, கணவனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.