கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஆதவன் என்ற 13 வயது மகனும், அக்சையா மற்றும் அதிசயா ஆகிய 2 மகள்களும் உண்டு. இதில் அதிசயா அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தவளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின்படி சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். தீவிரமாக தேடியும் கிடைக்காததால் சந்தேகத்தில் பிரகாஷ் மற்றும் சத்யாவிடம் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது சத்யா போலீசாரின் கவனத்தை திசை திருப்ப தான் 4 வாலிபர்களுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும், அதில் ஒருவர் சம்பவத்தன்று தன்னை பார்க்க வந்ததாக கூறியுள்ளார். சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்துபோது, அவர் கூறியபடி யாரும் வரவில்லை சத்யா தான், மகளை அழைத்து சென்றது பதிவாகியிருந்தது.
தீவிர விசாரணையில், பல்வேறு நபர்களிடம் யாருக்கும் தெரியாமல் ₹4 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி இருந்ததாகவும், அவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் குழந்தையை கொன்றால் அனுதாபப்பட்டு கடனை கேட்க மாட்டார்கள் என நினைத்து, மகளை தானே கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்தனர்.