பாட்னா: பீகாரில் பால் பாக்கி கேட்க சென்ற பெண்ணின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில், அவரது கணவரை துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலம் முங்கர் அடுத்த ஜான்பெஹாரா கிராமத்தை சேர்ந்த இந்துமதி, அவரது கணவர் ரமேஷ் யாதவ் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினர். இந்த தம்பதியினர் வளர்க்கும் மாட்டின் பால், அந்த தொழிலதிபருக்கு சப்ளை செய்யப்பட்டது. ஆனால் அந்த தொழிலதிபர் வாங்கிய பாலுக்கான பணத்தையும் கொடுக்கவில்லை. அதனால் அவர் அளித்த ரூ.1.5 லட்சம் பணத்தை அந்தத் தம்பதியினர் திருப்பித் தரவில்லை. இதனால் இருதரப்புக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை தொழிலதிபரின் வீட்டிற்கு சென்ற இந்துமதி, பால் வாங்கியதற்கான பணத்தை கேட்டுள்ளார். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில், தொழிலதிபரின் வீட்டில் இருந்த சிலர், இந்துமதியை மூங்கில்களால் தாக்கி காயப்படுத்தியதில் அவரது மண்டை உடைந்தது. இதையறிந்த இந்துமதியின் கணவர் ரமேஷ் யாதவ் மற்றும் அவரது மகன் சுமன் ஆகியோர் தொழிலதிபரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது ரமேஷ் யாதவையும் அவர்கள் கட்டையால் தாக்கினர். திடீரென வீட்டிற்குள் சென்ற தொழிலதிபர் சோட்டு சாவ், துப்பாக்கியை எடுத்து வந்து ரமேஷ் யாதவை நோக்கிச் சுட்டார். அவரது வாய் மற்றும் மார்பில் குண்டு பாய்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷ் யாதவை, அப்பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி டி.கே.பாண்டே கூறுகையில், ‘துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரமேஷ் யாதவ், குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபரிடம் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவர்களிடம் வாங்கிய பாலுக்கு தொழிலதிபர் பணம் தரவில்லை. அதனால் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்’ என்றார்.