சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை கிடைக்கும் வகையில் திருத்த சட்டமசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்ட திருத்த மசோதாவின்படி பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் பெருமளவில் குற்றங்கள் குறைந்துள்ளன. அதிலும் சென்னையில் கொலை, ெகாள்ளைகள், திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், ஒரு சில குற்றங்கள் நடந்துள்ளன. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு நடந்தது. இதுகுறித்து போலீசார் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்தனர். அதேபோல அண்ணா நகரில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுகுமார், பெண் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற ஒரு சில குற்றங்கள் கூட நடக்காமல் தடுக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய சட்ட திருத்தங்களோடு இரண்டு சட்ட திருத்த முன்வடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து முன்னுரையாக பேசியதாவது: சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி தரும் அரசு, திமுக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம். இதன்மூலமாக, பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூக பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கி தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த அரசில்தான். பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியுள்ளதும் இந்த அரசுதான். சத்யா என்ற பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும் இந்த அரசுதான். அனைத்து பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். இந்த வகையில், பிஎன்எஸ் சட்டத்தின் கீழும், நமது மாநில அரசு சட்டங்களின் கீழும் ஏற்கனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது. இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்கு, பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் சட்டங்களில் மாநில சட்டத் திருத்தத்திற்கும், ’தமிழ்நாடு 1998ம் ஆண்டு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத் திருத்தத்திற்கும், சட்டமுன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தமிழ்நாடு அரசு வழி வகுத்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் இந்த மாநிலத்தில் பணிபுரிகின்றனர். மேலும் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இரண்டிலும் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது. பொது இடங்களில் பெண்களை கேலி செய்தலை தடுக்கும் பொருட்டு 1998ம் ஆண்டில் தமிழ்நாடு பெண்களை கேலி செய்தல் தடுப்புச் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 44/1998) என்ற சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் அது தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டம் என்று மறு பெயரிடப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தொழில்நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்துவதன் விளைவாக பல்வேறு வழிமுறைகள் மூலம் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, எண் முறை மற்றும் மின்னணு வழிமுறைகள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான துன்புறுத்தல்களையும், சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவருவதற்காக இந்த சட்டத்தை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கான தண்டனைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
இதனால் இதுபோன்ற மோசமான செயல்கள் குறைக்கப்படும். மேலும் குற்றவாளிகள் தங்கள் குற்றங்களுக்கு முன் மாதிரியான மற்றும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவே, பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் முதன்மை சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் மற்றும் பெண்களுக்கு துன்புறுத்தலை ஏற்படுத்தும் குற்றவாளிக்கு எதிராக, கடுமையான தண்டனைகளை வழங்கவும், முன் மொழியப்பட்டுள்ளது. அதற்கு இணங்கியவாறு அரசானது, மேற்சொன்ன நோக்கத்திற்காக கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 44/1998ஐ தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்விளைவை கொடுக்க விழைகிறது. இவ்வாறு அந்த சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களில் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினால் நேற்று கொண்டு வரப்பட்டுள்ள திருத்த சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் இந்த திருத்த விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.