கொடைக்கானல்: கொடைக்கானலில் வீடு கட்டும் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவை மிரட்டியதாக, தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பேத்துப்பாறை பகுதியில் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமாக கோடை க்ரிக் லே-அவுட்டில் 13 சென்ட் நிலம் உள்ளது. இவர், கொடைக்கானலை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான காசிம் முகமது, அவரது மகன் ஜமீர் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வீடு கட்டி வருகிறார். இதற்காக இருவருக்கும் ரூ.1.70 கோடி கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே பணிகள் முடிவடையாத நிலையில் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் கட்டுமான பணிகள் தேக்கம் அடைந்தன. பணிகளை விரைந்து முடித்து தரும்படி பாபி சிம்ஹா கூறியுள்ளார். இதையடுத்து, காசிம் முகமது, ஜமீர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக உசேன், பேத்துப்பாறை மகேந்திரன் ஆகியோர் பாபி சிம்ஹாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடுமையான வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது. எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி கொடைக்கானல் நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் நால்வர் மீதும் கொடைக்கானல் போலீசார் மிரட்டல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா கூறுகையில், ‘‘முறையான அனுமதி பெற்றுத்தான் கட்டிடம் கட்டி வருகிறேன். இதற்கான ஒப்பந்தத்தை மீறி பணத்தை பெற்றுக் கொண்டு என்னை ஏமாற்றும்விதத்தில் ஜமீர், இவரது தந்தை காசிம் முகமது செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக உசைன், மகேந்திரன் உள்ளனர். மகேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது இந்த பிரச்னையிலும் சட்டவிரோதமாக தலையிடுகிறார்’’ என்றார்.