திருவனந்தபுரம்: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை இறைச்சிக் கூடத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நரிக்குனி என்ற பகுதியை சேர்ந்தவர் நஜ்புதீன் (46). அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தார். சொந்தமாக இறைச்சிக்கூடமும் உள்ளது. இவரது மனைவி ரஹீனா (35). இந்த நிலையில் திடீரென மனைவி ரஹீனாவின் நடத்தையில் நஜ்புதீனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதுதொடர்பாக ரஹீனா போலீசில் புகார் செய்தார். போலீசார் நஜ்புதீன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தாமரைசேரி குடும்ப நல நீதிமன்றத்திலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குகளும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நஜ்புதீன் சமாதானமாக செல்வதாக கூறி மனைவி ரஹீனாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதன்பின் ரஹீனாவுக்கு தெரியாமல் நஜ்புதீன் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ரகசியமாக தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில் இனிமேல் ஓடி மறைந்து வாழ வேண்டாம் எனவும், மனைவி ரஹீனாவை கொன்றுவிடுவது எனவும் நஜ்புதீன் முடிவு செய்தார். இதையடுத்து திட்டமிட்டபடி கடந்த 2017ம் ஆண்டு ஒரு நாள் ஆடு வெட்ட தொழிலாளர்கள் வரவில்லை என்று கூறி உதவிக்காக ரஹீனாவை இறைச்சிக் கூடத்திற்கு நஜ்புதீன் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு வைத்து ரஹீனாவின் கழுத்தை அரிவாளால் அறுத்துக்கொன்றுவிட்டு நஜ்புதீன் தலைமறைவானார்.
இது தொடர்பாக தானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சில நாட்களுக்கு பிறகு பரப்பனங்காடி என்ற இடத்தில் நஜ்புதீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மலப்புரம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி டெல்லஸ் தீர்ப்பு கூறினார். அதன்படி நஜ்புதீன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.