திருவள்ளூர்: சுடுகாடு அருகே மீட்கப்பட்ட குழந்தை தகாத உறவில் பிறந்ததால் தாயே அந்த குழந்தையை கொல்ல முயன்றது அம்பலமாகியுள்ளது. திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் சுடுகாடு அருகே உள்ள குளத்தில் பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தையை உயிருடன் யாரோ போட்டுவிட்டுச் சென்றனர்.குளத்தில் இருந்து மர்ம நபர்கள் மண்ணை எடுத்துச் சென்றபோது கற்கள் விழுந்தததையடுத்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சென்று பார்த்துள்ளனர். உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் மற்றும் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, பள்ளத்தில் இருந்த ஆண் குழந்தையின் தொப்புள்கொடிக் கூட அகற்றாமல் இருந்தது. மேலும் அந்த குழந்தையின் மீது மண் கொட்டி இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தையை சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அந்த பச்சிளங்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிறந்து சில மணிநேரமே ஆன இந்த ஆண் குழந்தை யாருடையது? குழந்தையை யார் குளத்தில் வீசிச்சென்றது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த லதா என்பவர்தான் அந்த குழந்தையை சுடுகாட்டில் வீசிச்சென்றார் என்பது தெரியவந்தது. திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு லதாவின் கணவர் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து லதாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கத்தில் லதா கர்ப்பமானார். இதனையடுத்து குழந்தையைப் பெற்றெடுத்த லதா, அருகில் உள்ள வறண்ட குளத்தில் சுமார் 5 அடிக்கு மேல் குழி தோண்டி அதற்குள் குழந்தையைப் போட்டு மண் கட்டிகளை மேலே நிரப்பி, குழந்தையைக் கொல்ல முயற்சி செய்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கவே அப்படியே விட்டுவிட்டுச் ஓடிவிட்டார். இந்நிலையில் குழந்தை மீட்கப்பட்டது. லதாவை போலீசார் கைது செய்து அவரது கள்ளக்காதலனை தேடுகின்றனர். 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் இறந்ததையடுத்து ஏற்பட்ட தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக தாய் கைது செய்யப்பட்டசம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.