திருச்சி: எஸ்பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி எஸ்பியாக வருண்குமார் உள்ளார். இவரது மனைவியான புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கொலை மிரட்டல்கள் விடுவிக்கும் வகையில் வீடியோ வைரலானது. இதுதொடர்பாக திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்பி வருண்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார், கொலை மிரட்டல் விடுத்த விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கண்ணன்(48), உறுப்பினர் திருப்பதி (35) ஆகியோரை கடந்த 13ம்தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கண்ணன், திருப்பதி ஆகியோர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை மிரட்டல் விடுக்க தூண்டியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், யூடியூபருமான திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் மீது தில்லைநகர் ேபாலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதுதொடர்பாக மேலும் 41 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான கள்ளக்குறிச்சி மாவட்டம் உளூந்தூர்பேட்டையை சேர்ந்த சண்முகம் (34) மற்றும் மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான்(22) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில், மீதமுள்ள 39 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.