*மாஜி போலீசார் மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு
தக்கலை : தக்கலை அருகே மரணம் அடைந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. உடலுக்கு காவல்துறை சார்பில் முறையாக மரியாதை செலுத்த அதிகாரிகள் வராததை கண்டித்து ஓய்வு பெற்ற போலீசார் மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ்நாட்டில் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இறந்தால் அவர் வீடு அமைந்துள்ள பகுதிக்குட்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் சென்று, டிஜிபி சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு இருந்த போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து காவல் நிலையங்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லது எஸ்.ஐ.க்கள் செல்ல வேண்டும். போலீஸ் உயர் அதிகாரிகள் தொடங்கி கடைநிலை காவலர் வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும். டிஜிபி சார்பில் அஞ்சலி செலுத்துவதாகவே இதை கருத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் குமரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற போலீசார் இறந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டரோ, எஸ்.ஐ.க்களோ நேரடியாக சென்று டிஜிபி சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது இல்லை. எஸ்.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தாலும் இந்த நடைமுறை முறையாக பின்பற்றுவது கிடையாது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டம் தக்கலை சாரோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. மணி என்பவர் நேற்று முன் தினம் இரவு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர் குமரி மாவட்டத்தில் குளச்சல் டிராபிக் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியவர் ஆவார். தற்போது குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, சாரோடு பகுதிக்குட்பட்ட காவல் நிலையமான தக்கலை காவல் நிலையத்துக்கு நேற்று முன் தினம் தகவல் தெரிவித்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று மதியம் 3 மணி வரை தக்கலை இன்ஸ்பெக்டரோ அல்லது காவல் நிலையத்தில் இருந்தோ டிஜிபி சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த யாரும் செல்ல வில்லை. இதையடுத்து அஞ்சலி நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஓய்வு பெற்ற போலீசார் சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள் மறியல் செய்ய போவதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி எஸ்.பி. அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தக்கலை காவல் நிலைய எஸ்.ஐ. பேச்சிமுத்து பாண்டியன் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் சென்று, மணி உடலுக்கு மாலை அணிவித்துள்ளனர்.
டிஜிபி உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் செல்ல வேண்டும். மலர் வளையம் வைத்து தான் அஞ்சலி செலுத்த வேண்டும். மலர் வளையத்தில் டிஜிபி என்றும் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதுவும் இல்லாமல் வெறும் மாலையை மட்டும் போட்டு கடமைக்கு வந்து சென்றுள்ளனர் என அங்கிருந்த ஓய்வு பெற்ற போலீசார் வேதனையுடன் கூறினர்.
கேரளாவை போல் அரசு மரியாதை
குமரி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள சுந்தரவதனம், டிஜிபி அலுவலக உத்தரவை முறையாக கடைபிடிக்கும் வகையில் ஓய்வு பெற்ற போலீசார் இறந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர், 3 போலீசார் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற போலீசார் கூறினர். மேலும் கேரளாவில் ஓய்வு பெற்ற போலீசார் இறந்தால், அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அந்த நடைமுறையை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும் என்றனர்.